tamilnadu

img

காவிரிப் படுகையைக் காக்க களம் அமைப்போம்!

தமிழகத்திற்கெதிராக மத்திய பாஜக அரசு மூர்க்கத்தனமாக செயல்படும் நிலையில் மாநிலத்தில் ஆளும் அரசு தமிழகத்திற்கு எதிரான திட்டங்களையெல்லாம் கைகட்டி, வாய்பொத்தி ஏற்று செயல்படுத்தி வரும் சூழலில் விவசாயிகளுக்கு விரோதமான திட்டங்களை எதிர்கொள்ள ஒன்றுபட்ட,  நீடித்த போராட்டம் அவசியம்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்து கொண்டிருக்கிற காவிரி படுகையை மிகப் பெரும் ஆபத்து சூழ்ந்துள்ளது. காவிரிபடுகை என்றால் பசுமைப்போர்த்திய வயல்கள், குறுக்கும் நெடுக்குமாக சுமார் 46000 கி.மீ நீளமுள்ள ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட தொன்மையான சின்னங்கள் இவை தான் நமது நினைவுக்கு வரும். 
“வான்பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடற் காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்” 
- என்று பட்டினப்பாலை காவிரிப்படுகையின் பெருமை பேசும்.

ஆனால் இப்போது, காவிரிப் படுகையில் நிலக்கரி, மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷேல்கேஸ் ஆகிய வார்த்தைகள் தான் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இவற்றை எடுக்க வேதாந்தா, ரிலையன்ஸ், ஓ.என்.ஜி.சி ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது மத்திய அரசு. கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால், விழுப்புரம் மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இப்போது ஏலம் விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காவிரி டெல்டாவில் ஆழ்கடலற்ற 2 கடல் பகுதிகளை வேதாந்தா நிறுவனமும், மற்றுமொரு சமவெளிப் பகுதியை ஓ.என்.ஜி.சியும் உரிமம் பெற்றன.

இதன்படி, கடலூர் மாவட்டம் தியாகவள்ளியிலிருந்து நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் வரையுள்ள நிலப்பரப்பில் 731 சதுர கி.மீ. ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும், மரக்காணம் முதல் குள்ளஞ்சாவடி வரை 1794 சதுர கி.மீ மற்றும் பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரை 2674 சதுர கி.மீ பகுதியை வேதாந்தா நிறுவனத்திற்கும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 
பிறகு கடந்த ஜனவரி 4ந் தேதி வெளியிடப்பட்ட ஏல அறிவிப்பில் திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் தொடங்கி நாகை மாவட்டம் தெற்குப் பகுதி வரை 474 ச.கி.மீ பரப்பளவு ஏலம்விடப்பட்டது. மூன்றாவதாக, கடலூர் மாவட்ட தென்பகுதியும் நாகை மாவட்டம் வடக்கு பகுதியும் உள்ளடக்கி 459.89 ச.கி.மீ பரப்பளவுக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1403.41 ச.கி.மீ  பரப்பளவுக்கும் ஏலம் விடப்பட்டுள்ளது.  மேற்குறிப்பிட்டுள்ள  மூன்று வட்டாரங்களில் மொத்தம் 341 கிணறுகள் அமைத்து எரிவாயுவை எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதில் 74 கிணறுகள் ஓ.என்.ஜி.சியும், 267 கிணறுகள் வேதாந்தா நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது மேலும் 104 கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

ஏற்கனவே, 2010ம் ஆண்டு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் என்ற நிறுவனம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சுமார் 691 ச.கி.மீ பரப்பளவில் நிலக்கரி படுகை மீத்தேன் வாயு எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இந்த திட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளும் போராடியதன் விளைவாக தற்காலிக தடை விதித்து 17.7.2013 அன்று அப்போதைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அறிவித்தார். அத்துடன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவரின் தலைமையில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை இந்திய தொழில்நுட்ப கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை சார்ந்த வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 2013 ஜுலை 17ந் தேதி அறிக்கையில் ஜெயலலிதா “இந்த திட்டம் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது உறுதி செய்யப்பட்டால் தான், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி படுகை மீத்தேன் வாயு திட்டத்தை அனுமதிக்க முடியும். மேலும் “தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதி நிலங்களுக்கும் விவசாயிகளுக்கும் சிறிதளவு பாதிப்பு ஏற்படும் என்றாலும் இந்த திட்டத்தை செயல்படுத்த எனது அரசு அனுமதி அளிக்காது” என்று குறிப்பிட்டார். 

நிபுணர்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 8.10.2015 அன்று அரசாணை எண்.186 மூலம் நிரந்தரமாக தடைவிதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அத்துடன் “காவிரிப் படுகைப் பகுதியில் நிலக்கரிப்படுகை மீத்தேன் எரிவாயு வெளிக்கொணர்தல் மற்றும் உற்பத்தி தொடர்பான செயல்பாடுகளை மத்திய அரசு கைவிட வேண்டுமென்றும் எதிர்காலத்தில் இது தொடர்பான எந்தவிதமான முயற்சியினையும் தொடங்குவதற்கு முன்னர் தமிழக அரசினை கலந்து ஆலோசிக்க வேண்டுமென்றும் மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொள்ள முடிவு செய்துள்ளது” என்று அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தடை ஆணை இப்போதும் நடைமுறையில் இருக்கிறது. மாநில அரசு தடைவிதித்து உத்தரவிட்டுள்ள நிலையில் மத்திய அரசு தானடித்த மூப்பாக மாநில அரசை மதிக்காமல்  காவிரிப் படுகையில் மீத்தேன் எடுப்பதற்கான அனுமதியை வழங்கிக் கொண்டுள்ளது. எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய, கோபப்பட வேண்டிய மாநில அதிமுக அரசு மௌனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டுள்ளது. அம்மாவின் வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிக்கொள்ளும் இப்போதிருக்கிற மாநில அரசு பி.ஜே.பி அரசின் கைப்பாவையாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல என்பதற்கு இது உதாரணம். 

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று வாயில் வடை சுடுகிறார்களே தவிர நடைமுறையில் விவசாயிகளுக்கு விரோதமான எல்லா திட்டங்களுக்கும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். என்னென்ன திட்டங்களை தமிழக அரசு அனுமதிக்காது என்று தெளிவாக சொல்வதில் ஏன் தயக்கம்? எதிர்த்து போராடுபவர்கள் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறையை உபயோகிப்பது, பொய்வழக்கு போட்டு சிறையிலடைப்பது, போராட்டத்திற்கு அனுமதி மறுப்பது  போன்ற கொடூரமான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. காவிரிப்படுகை மக்களின் வாழ்க்கை பொருளாதாரம் காவிரியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. காவிரியில் நீர்வரத்து இல்லையேல் அம்மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து போகும். பொருளாதாரமே முடங்கிப் போகும். விவசாயத்தைத் தவிர அங்கு வேறு எதுவுமில்லை. எனவே, ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டிய தேவை என்ன? அந்நிய செலாவணி மிச்சமாகும். எண்ணெய், எரிவாயு இறக்குமதி குறையும் என்று பதில் அளிக்கிறார்கள். எண்ணெயும், எரிவாயுவும் இங்கே எடுப்பதனால் சர்வதேச விலையில் எந்த விதத்திலும் மாற்றம் இருக்கப் போவதில்லை. சர்வதேச சந்தையில் என்ன விலையோ அதே விலைக்குத்தான் இங்குள்ள மக்களுக்கு கிடைக்கும். எனவே, இப்போது இறக்குமதி செய்வதை போல் தொடர்ந்து இறக்குமதி செய்வதனால் புதிதாக எந்தப் பிரச்சனையும் உருவாகப் போவதில்லை. மாறாக, காவிரிப் படுகையில் எடுப்பதனால், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. நிலவளம் முற்றிலும் பாதிக்கப்படும், நிலத்தடி நீர் வளம் அழிந்து போகும். உணவு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டு நமது சுயசார்பை இழக்க நேரிடும். இவை எதுவும் அங்கே இல்லை என்றால் மக்கள் தாங்கள் வாழ்ந்த இடத்தை விட்டு அகதிகளாக வெளியேற வேண்டிய அவல நிலைக்கு ஆளாவர். எனவே தான் எதிர்க்கிறோம்.

மண்ணையும், மக்களையும் பாதுகாக்க பல்வேறு அமைப்புகள் பலகட்டப் போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளனர். தமிழகத்திற்கெதிராக மத்திய பி.ஜே.பி அரசு மூர்க்கத்தனமாக செயல்படும் நிலையில் மாநிலத்தில் ஆளும் அரசு தமிழகத்திற்கு எதிரான திட்டங்களையெல்லாம் கைகட்டி, வாய்பொத்தி ஏற்று செயல்படுத்தி வரும் சூழலில் விவசாயிகளுக்கு விரோதமான திட்டங்களை எதிர்கொள்ள ஒன்றுபட்ட,  நீடித்த போராட்டம் அவசியம். எனவே தான், ஜுன்-18 ஆம் தேதி தஞ்சாவூரில் ஒத்த கருத்துடைய அமைப்புகள் கூடி “காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம்” என்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட போராட்டத்திற்கு முன்வரக்கூடிய அனைத்து அமைப்புகளையும் இக்கூட்டியக்கத்தில் இணைத்துக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களின் வலுவான எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக ஜுலை-9 ஆம் தேதி கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மாபெரும் பேரணியை நடத்தி மாவட்ட ஆட்சியர்களிடம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி மனு அளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தால் வர இருக்கும் பேராபத்து குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கிராமங்கள் தோறும் பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. “வருமுன்னர் காவாதான் வாழ்க்கை - எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்” என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப காவிரி படுகையை காக்க அனைவரும் அணி திரள்வோம்! 

கட்டுரையாளர் : மாநில பொதுச்செயலாளர் 
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்